உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள செம்ரி சுங்கச்சாவடியில் சனிக்கிழமை மதியம் ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்தது. சுங்கச்சாவடியில் ஃபாஸ்டேக் ஸ்கேனர் சரியாக வேலை செய்யாததால், இரண்டு கார்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தன. அப்போது சுங்கச்சாவடி ஊழியரான ரமாகாந்த் ரிச்சாரியா என்பவர், காரில் இருந்த ஃபாஸ்டேக்கை கைமுறை கருவி மூலம் ஸ்கேன் செய்ய முன்வந்தார்.

அந்த நேரத்தில், பின்னால் அதிவேகமாக வந்த ஒரு லாரி, நின்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்த மோதலின் வேகத்தில் சுங்கச்சாவடி ஊழியர் தூக்கி வீசப்பட்டு ஒரு காரின் முன்பக்கத்தில் விழுந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி, கார்களையும் காயமடைந்த ஊழியரையும் சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற பிறகே நின்றது.

இதில் காயமடைந்த ஊழியர் மற்றும் கார்களில் இருந்த பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தற்போது ரமாகாந்த் ரிச்சாரியாவின் நிலைமை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

“>

 

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், லாரி ஓட்டுநரின் அலட்சியம் காரணமாக இந்த விபத்து நடந்ததா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.