நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளில் மதுரை மத்திய தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் முஸ்தபா அதிரடி வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தேர்தல் முடிவுகளுக்குப் பின் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள மாஸ் பதிவு ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

தோல்வியடைந்தாலும் துளியும் சோர்ந்து போகாமல், ஜனநாயகத்தின் மாண்பைக் காக்கும் வகையில் அவர் பேசியுள்ள வார்த்தைகள் வைரலாகி வருகின்றன. அவர் தனது பதிவில், “தேர்தல் களம் என்பது நேர்மையாக இருக்க வேண்டும். இந்தத் தேர்தலில் ஓட்டுக்கு ஒரு பைசா கூட பணம் கொடுக்காத, எந்தவொரு பொய்ப் பிரச்சாரமும் செய்யாத தவெக வேட்பாளர் முஸ்தபாவிடம் நான் தோற்றதில் எனக்குப் பெருமையும் மகிழ்ச்சியுமே” என்று தவெக-வின் நேர்மையான வெற்றியைப் பாராட்டியுள்ளார்.

மேலும், மற்றொரு முக்கிய வேட்பாளரை மறைமுகமாகச் சாடிய பிடிஆர், “அதே நேரத்தில், ஓட்டுக்கு 1000 ரூபாய் பணம் வழங்கி குறுக்கு வழியில் ஜெயிக்க நினைத்த வேட்பாளரை, மதுரை மத்திய தொகுதி மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து மரண அடி கொடுத்துள்ளனர். அதை நினைக்கும் போது எனக்கு இன்னும் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். நேர்மையான அரசியலுக்குக் கிடைத்த வெற்றியை மனதாரப் பாராட்டிய பிடிஆரின் இந்த முதிர்ச்சியான பதிவு சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.