2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் குழப்பங்களுக்கு இடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தொண்டர்களுக்கும், கட்சியை விட்டுச் சென்றவர்களுக்கும் மிக முக்கியமான எதார்த்தமான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், “அரசியல் களம் என்று இருந்தால் அவ்வப்போது பல பலத்த சூறாவளிப் புயல்கள் வந்து போவது ரொம்பவே சகஜமான ஒன்றுதான்.
ஆனால், அப்படிப்பட்ட இக்கட்டான புயல்களை எல்லாம் தாங்கியும், அதைத் தாண்டியும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ‘ஆயிரம் காலத்து பயிர்’ தான் நம்முடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்று கட்சியின் வலிமையை பெருமிதத்தோடு சுட்டிக்காட்டியுள்ளார். அதே நேரத்தில், கட்சியில் இருந்துகொண்டே துரோகம் செய்பவர்களைப் பற்றிப் பேசிய இபிஎஸ், “கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் பாயும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
அதே சமயம் ஒருவேளை அவர்கள் தங்களது தவற்றை முழுமையாக உணர்ந்து திருந்திக் கட்சிக்கு வர நினைத்தால், அவர்களை மீண்டும் ஒரு தாய் உள்ளத்தோடு கட்சிக்குள் ஏற்றுக் கொள்ள அதிமுக எப்போதும் தயாராகவே இருக்கிறது” என்று பச்சைக் கொடி காட்டியுள்ளார். எடப்பாடியாரின் இந்த ஓபன் டாக், ஆதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற மூத்த தலைவர்களை மீண்டும் தாய்க்கழகத்திற்கு கொண்டு வருவதற்கான மாஸ்டர் பிளானா என்று சோசியல் மீடியாவில் விவாதங்கள் அனல் பறக்கின்றன.
