நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு மற்றும் தேர்தல் வியூகம் குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகத் தெளிவான, ஆக்ரோஷமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “நாம் பேச வேண்டிய அரசியல் கருத்துக்களைப் பேசிவிட்டோம்; இனிமேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்ற அளவுக்கு எல்லாவற்றையும் மக்களிடம் கொண்டு சேர்த்துவிட்டோம்.
பொதுவாக மனிதர்களுக்குக் கஷ்டம் வரும்போதுதான் கடவுளையும் கோயிலையும் தேடிப் போவார்கள். அதேபோல, தமிழக மக்கள் தங்களுக்குப் பாதிப்பு வரும்போது ஒரு நாள் நிச்சயம் என் பிள்ளைகளைத் தேடி ஓடி வருவார்கள்” என்று அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் கூட்டணிப் பேச்சுகளுக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்த சீமான், “இனி எவனுடனும் பேச்சுவார்த்தை கிடையாது, எந்த ஒரு திராவிட, தேசியக் கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் எவரோடும் கூட்டின்றி, மறுபடியும் தனித்து 40 தொகுதிகளிலும் களம் காண்போம். எப்போதும் போல சமத்துவமாக 20 பெண்கள், 20 ஆண்கள் எனப் புலி மறவர்களைக் களமிறக்குவோம். இந்தத் தேர்தலில் நாம் தற்காலிகமாக இழந்த வாக்குகளை மீட்டெடுத்து, பன்மடங்கு வாக்குகளை உயர்த்தி ‘அடுத்தது நாங்கதான்’ என்ற நிலையை தமிழ்நாட்டில் உருவாக்குவோம்” என்று அதிரடியாக முழங்கியுள்ளார். சீமானின் இந்த அதிரடி அறிவிப்பு தம்பிகளுக்குப் புத்துணர்ச்சியை ஊட்டியுள்ளது.
