மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள தர்யாபூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், பாஜக பெண்கள் பிரிவு நகரத் தலைவர் மேகா பாரதி, அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலேவுக்கு காகிதத்தால் விசிறிவிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அமைச்சர் பொதுமக்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு அருகில் நின்ற மேகா பாரதி காகிதத்தை வைத்து விசிறியுள்ளார். இதை உடனடியாக கவனித்த அமைச்சர் பவன்குலே, அவரைத் தடுத்து நிறுத்தியதோடு, பொது மேடையில் கண்ணியத்தையும் முறையான விதிகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.
அமைச்சர் உடனடியாகத் தடுத்த போதிலும், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தீயாய் பரவி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தேவையற்ற அரசியல் செயலாக இருப்பதாக ஒரு தரப்பினர் விமர்சித்தாலும், அமைச்சர் உடனடியாக அதைத் தடுத்து நிறுத்தியதை மற்றொரு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, மும்பையில் நடந்த மற்றொரு வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பவன்குலே, பொதுமக்கள் அன்றாடம் சந்திக்கும் நிலம் மற்றும் சொத்து தொடர்பான பிரச்சினைகளை விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
