திருமண வரன் தேடும் செயலிகளின் மூலம் பெண்களை குறிவைத்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த இளைஞரை தாம்பரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தாம்பரம் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த கோபிநாதன் (25) என்ற இளைஞர், பல்வேறு மெட்ரிமோனி செயலிகளில் தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர் உள்ளிட்ட போலித்தகவல்களுடன் தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். விலை உயர்ந்த கார், சொகுசு பங்களா உள்ளிட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி பணக்கார இளைஞராக தன்னை காட்டிக் கொண்டு பல பெண்களுடன் தொடர்பு கொண்டு வந்துள்ளார்.
இவ்வாறு தொடர்பில் இருந்த ஐ.டி. நிறுவன பெண் ஊழியரிடம், தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக கூறி முதலில் 20 ஆயிரம் ரூபாயையும், பின்னர் வீட்டு வேலைக்காரருக்கான இதய அறுவை சிகிச்சைக்காக 3 லட்சமும் பெற்றுள்ளார். தொடர்ந்து பல்வேறு காரணங்களால் மொத்தம் 9.80 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
திருமண பேச்சைத் தொடர்ந்து தட்டிக்கழிக்கும் கோபிநாதனின் நடத்தை குறித்து சந்தேகம் கொண்ட இளம்பெண், தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியுடன் விசாரித்ததில் அவர் போலி தொழிலதிபர் என்பதும், இதே முறையில் பல பெண்களை ஏமாற்றி வந்ததும் வெளிச்சத்திற்குவந்தது.
புகாரின் பேரில் தாம்பரம் குற்றப்பிரிவு போலீசார் அவரது லேப்டாப்கள், மொபைல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டபோது, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 12 பெண்களிடம் மோசடி செய்தது கண்டறியப்பட்டது. மேலும், சில இளம்பெண்களின் தனிப்பட்ட வீடியோக்களும் இருப்பது தெரியவந்ததால், அவற்றை பயன்படுத்தி மிரட்டல் நடத்தினாரா என்பதையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மேலும் டாக்டர், வழக்கறிஞர் மற்றும் இன்ஜினியர் என பல்வேறு விதமாக தன்னை அறிமுகப்படுத்தி பெண்களை மோசடி செய்த கோபிநாதன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
