தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது எதற்காக விஜயை தொட்டோம் எதற்காக விஜயுடன் இருந்த மக்களை தொட்டோம் என்று கண்டிப்பாக வருத்தப்படுவார்கள் என்று திமுகவை விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் கூறியதாவது, தமிழகத்தில் இன்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என எந்த கட்சியாக இருந்தாலும் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்காமல் அரசியல் செய்ய முடியாது. திமுக அண்ணாவை வைத்து வியாபாரம் செய்யும் கட்சி என்றார்.
அதன் பிறகு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அனைவருக்கும் வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என்பது குறித்த கேள்விக்கு முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் மத்ததை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார். இதைத்தொடர்ந்து என்னை தொட்டவர்களை எதற்காக தொட்டோம் என்று வருத்தப்பட வைப்பதாக விஜய் சொன்னது குறித்த கேள்விக்கு, அது தொட்டவர்களுக்கு தானே வருத்தம்.
எங்களுக்கு எதுவும் இல்லையே. அவர் திமுகவை பற்றி தான் அவ்வாறு பேசியுள்ளார். மேலும் அடுத்து வரும் தேர்தலில் கண்டிப்பாக தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற்று அதிமுக தலைமையிலான ஆட்சி மலரும் என்றார்.
