விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில், முக்குலத்தோர் புலிப்படை சார்பில் ‘சமத்துவம் பழகு’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் கருணாஸ், தமிழக அரசியல் சூழல் மற்றும் புதிய அரசியல் வருகைகள் குறித்துக் காரசாரமாகப் பேசினார். அவர் பேசியதாவது:

தமிழக மண்ணில் மதவாத சக்தியான பாஜக காலூன்றிவிடக் கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காகவே, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்தோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி இருக்கும் வரை தமிழகத்திற்குள் பாஜக நுழையவே முடியாது.

தமிழகத்தில் நீங்கள் எந்த நடிகருக்கு வேண்டுமானாலும் விசிலடியுங்கள், அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. உங்களை விட அதிக விசில் அடிக்கும் கூட்டத்தை என்னாலும் திரட்ட முடியும். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே முதல்வர் நாற்காலியில் அமரத் துடிப்பது விஜய்யின் பேராசையையே காட்டுகிறது. வெளிநாட்டில் இருந்து வாங்கிய தனது சொகுசு காருக்கே முறையாக வரி கட்டாதவர் என்பதைத் தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை.

தாமரையை ஒப்பிட்டுப் பேசிய அவர், “படர் தாமரை உடம்புக்கு நாசம், ஆகாயத் தாமரை குளத்திற்கு நாசம், ஆனால் பாஜக-வின் தாமரை இந்த நாட்டுக்கே நாசம்” எனத் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறி, அவரை ஆட்சிக்கு வரவிடமாட்டேன் என முழங்கிய டி.டி.வி. தினகரன், இப்போது அவரோடு இணக்கமாகப் பேசுவது வேடிக்கையாக உள்ளது. இதைப் பங்காளி சண்டை என்று கூறி மழுப்புவது ஏற்கத்தக்கதல்ல. அரசியல் ஆதாயத்திற்காகத் தினகரன் தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றி வருகிறார். இவ்வாறு கருணாஸ் தனது உரையில் பேசினார்.