நாட்டின் 77-வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு, 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள வி. காமகோடியைக் கேலி செய்யும் வகையில் கேரள காங்கிரஸ் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “பத்மஸ்ரீ விருது பெற்ற வி. காமகோடிக்கு வாழ்த்துகள். ஐஐடி மெட்ராஸில் கோமியம் குறித்த உங்கள் அதிநவீன ஆராய்ச்சியை அங்கீகரித்து, கோமியத்தை உலக அரங்கிற்கு கொண்டு சென்றதற்காக நாடு உங்களுக்கு இந்த கௌரவத்தை அளித்துள்ளது” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வி. காமகோடி, “கோமியம் ஒரு மிகப்பெரிய மருந்து; அது பிணிகளை நீக்கும். பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி அதற்கு இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை உட்கொள்ள வேண்டும்” என்று பேசியிருந்தார். ஒரு முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர், அறிவியல் ஆதாரமற்ற கருத்துகளை முன்வைப்பதாக அப்போது சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பகுத்தறிவாளர்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனைச் சுட்டிக்காட்டியே காங்கிரஸ் தற்போது விமர்சித்துள்ளது.

காங்கிரஸின் இந்த விமர்சனத்திற்கு ‘சோகோ’ (Zoho) நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “வி. காமகோடி மைக்ரோ-புராசஸர் (Micro-processor) வடிவமைப்பில் உலகத்தரம் வாய்ந்த நிபுணர். ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தை மிகச்சிறந்த முறையில் அவர் வழிநடத்தி வருகிறார். இந்த விருதுக்கு அவர் முழு தகுதியானவர். காங்கிரஸின் இத்தகைய விமர்சனங்கள் அவர்களின் ‘காலனித்துவ மனநிலையை’ காட்டுகிறது” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 5 பேருக்கு பத்ம விபூஷன், 13 பேருக்கு பத்ம பூஷன் மற்றும் வி. காமகோடி உள்ளிட்ட 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.