திருவனந்தபுரம் அருகே பீமப்பள்ளி கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, கடலில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற 10-ஆம் வகுப்பு மாணவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார். அவருடன் சென்ற இரு நண்பர்கள் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டனர்.
அதாவது திருவனந்தபுரத்தை சேர்ந்த நண்பர்கள் ரிஹான், சஜித், திபின் (தலா 16). இவர்கள் மூவரும் அங்குள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்தனர். பள்ளி மற்றும் டியூசனுக்கு எப்போதும் ஒன்றாகச் செல்லும் இவர்கள், சம்பவத்தன்று மாலை டியூசனுக்குச் செல்வதற்கு முன்பாக அருகே உள்ள கடற்கரையில் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்கள் விளையாடிய பந்து எதிர்பாராத விதமாக கடலுக்குள் விழுந்தது. அதனை எடுக்க முயன்றபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி மூன்று மாணவர்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
மாணவர்கள் கடலில் தத்தளிப்பதைக் கண்ட உள்ளூர் மீனவர்கள், உடனடியாகக் கடலில் குதித்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் சஜித் மற்றும் திபின் ஆகிய இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும், ரிஹான் அலையின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து, டைவிங் நிபுணர்கள் மற்றும் மீட்புத் தொழிலாளர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு, கடலுக்கடியில் மணலில் மூழ்கிய நிலையில் கிடந்த ரிஹானை மீட்டனர். உடனடியாக மருத்துவமனைக்கு ரிஹான் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மேலும் ஒரே வகுப்பில் படித்து வந்த நண்பர்களில் ஒருவர் பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
