ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதியினர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஆந்திர மாநிலம் பத்துங்க பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமண் ராவ் (32). மாற்றுத்திறனாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சியாமளா (30) என்பவருக்கும் கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இந்த தம்பதியினர் திருப்பதியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு லட்சுமண் ராவின் தாய் உடல்நலக்குறைவால் திடீரென மரணமடைந்தார். தாயின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்த லட்சுமண் ராவ், அவரது இழப்பைத் தாங்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். தாயின் மறைவுக்குப் பிறகு கடந்த சில நாட்களாகவே அவர் மிகுந்த சோகத்திலேயே மூழ்கி காணப்பட்டார்.

இதற்கிடையே, தனது மனைவியிடம் அடிக்கடி அழுது புலம்பிய லட்சுமண் ராவ், “அம்மா அடிக்கடி என் கனவில் வருகிறார். அவர் என்னை தன் அருகிலேயே வரும்படி அழைக்கிறார்” என்று கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் மனமுடைந்த அவர், “அம்மா இல்லாத இந்த உலகத்தில் என்னால் வாழ முடியவில்லை. எனவே நாம் இருவரும் தற்கொலை செய்து கொண்டு, அம்மாவிடமே சென்று விடுவோம்” என்று மனைவியிடம் பிடிவாதம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், அவரது இந்த விபரீத முடிவுக்கு மனைவி சியாமளா சம்மதிக்கவில்லை. தற்கொலை எண்ணத்தை உடனடியாக கைவிடுமாறு கணவருக்கு பலமுறை அறிவுரை கூறியதுடன், அவரது முடிவுக்கு முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இவர்கள் வசித்து வந்த வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் பூட்டியே கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கணவன், மனைவி இருவரும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவர்களின் உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, லட்சுமண் ராவின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் அதிர்ச்சியூட்டும் வகையிலான ஒரு ‘செல்பி’ வீடியோ பதிவாகியிருந்தது தெரியவந்தது. அதில், “தாய் இறந்த துக்கம் தாங்காமல், மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக” லட்சுமண் ராவ் உருக்கமாகப் பேசியிருந்தது போலீசாரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தாயின் மறைவு ஏற்படுத்திய மன அழுத்தத்தில் ஒரு குடும்பமே அழிந்துபோன இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.