சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த உருக்கமான வீடியோவில், ஒரு சிறுவன் பூக்கடையில் தனியாக அமர்ந்திருக்கிறான். அப்போது அங்கு வரும் ஒருவர், தனக்கு மிகவும் பசிக்கிறது, சாப்பிட ஏதாவது கிடைக்குமா எனக் கேட்கிறார். அந்தச் சிறுவன் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், “சாப்பாடு இல்லை, காசு வேணும்னா தருகிறேன்” என்று கல்லாப் பெட்டியைத் திறந்து பார்க்கிறான். “அம்மா இல்லையே, காசு கொடுத்தால் திட்ட மாட்டார்களா?” என அந்த நபர் கேட்க, “பரவாயில்லை, நான் சொல்லிக்கொள்கிறேன்” என அந்தச் சிறுவன் கூறும் பதில், அவனது வளர்ப்பின் மேன்மையை அப்படியே கண்முன் நிறுத்துகிறது.
நல்ல வளர்ப்பு.இவனைப் பெற்ற தாய் உண்மையில் நல்ல மனசு கொண்ட மகராசி🙏🙏❤ pic.twitter.com/jyGk4jCJJ1
— சங்கர் ரஜினி ரசிகன் (@Rajinirasigan53) January 19, 2026
கல்லாப் பெட்டியில் தேடியும் காசு இல்லாத நிலையில், கடைசியாக இருந்த பத்து ரூபாயை அந்தச் சிறுவன் தயக்கமில்லாமல் எடுத்து கொடுக்கிறான். அந்தப் பிஞ்சு மனதின் பெருந்தன்மையைப் பார்த்து நெகிழ்ந்து போன அந்த நபர், “பலரிடம் பசி என்று கேட்டும் யாரும் உதவவில்லை, நீதான் உதவினாய்” எனக் கூறி, அவனுக்கு 500 ரூபாயைப் பரிசாக வழங்குகிறார். சிறுவன் முதலில் அதை வாங்க மறுத்தாலும், அந்த நபர் கட்டாயப்படுத்தி கொடுக்கிறார். இந்தச் சின்ன வயதிலேயே பிறர் பசி போக்கத் துடித்த அந்தச் சிறுவன், இன்று இணையதளங்களில் ‘ரியல் ஹீரோவாக’ கொண்டாடப்பட்டு வருகிறான்.
