தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீசைலம் என்பவர், தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் தனது 4 வயது இரட்டை பெண் குழந்தைகளான கீதான்ஸ்ரீ மற்றும் கீதான்விகாவை கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார். பெண் குழந்தைகள் பிறந்த காரணத்தால் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்த அவர், சம்பவத்தன்று குழந்தைகளை விளையாட அழைத்துச் செல்வதாகக் கூறி விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்று இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார்.

குழந்தைகள் கிணற்றில் தவறி விழுந்துவிட்டதாக அவர் நாடகமாடிய போதிலும், சந்தேகமடைந்த கிராம மக்கள் அவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தீயணைப்பு வீரர்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. போலீஸ் விசாரணையில், குழந்தைகளைக் கொன்றுவிட்டால் மனைவி தன்னை விட்டுப் பிரிந்துவிடுவார் என்றும், அதன் பிறகு வேறொரு திருமணம் செய்து ஆண் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்திலும் இந்தக் கொலையைச் செய்ததாக ஸ்ரீசைலம் ஒப்புக்கொண்டார்.

மனசாட்சியற்ற இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.