உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சு. கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு 8 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்குப் பிறகு, தனது மனைவியிடம் பணம் மற்றும் கார் ஆகியவை வரதட்சணையாக தேவை என தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.

சஞ்சுவின் இந்த செயலுக்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்ததாகவும், மனைவியை அடித்து, தூண்டிவிட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த சூழலில், வரதட்சணை அளிக்காமல் இருப்பதற்காக தனது மனைவியை மிரட்டும் நோக்கில், பிறந்ததிலிருந்து வெறும் 8 மாதங்களே ஆன தங்களது குழந்தையை சஞ்சு தலைகீழாக பிடித்தபடி வீதியில் நடந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஊர்மக்கள் தக்க சமயத்தில் தலையிட்டபோதும், சஞ்சு பயமின்றி “எனக்குப் பணம் வேண்டும், இதை வீடியோ எடுத்து வைங்க!” என்று சத்தமிட்டதாக தெரிகிறது.

“>

 

இந்த அதிர்ச்சிக்குரிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் வேதனையையும் கண்டனத்தையும் எழுப்பியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் சஞ்சுவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சஞ்சுவின் குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இடுப்பு எலும்பு இடம்பெயர்ந்துள்ளதாக டாக்டர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தன்னுடைய குழந்தையை மீட்டு, இனி சஞ்சுவிடமிருந்து பாதுகாப்பாக வாழ விரும்புவதாக சஞ்சுவின் மனைவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.