டெல்லி, பாண்டவ் நகர் பகுதியில் நடந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்த பி.காம் இரண்டாம் ஆண்டு மாணவரான அக்ஷத் சர்மா (20), தனது தோழியுடன் பேசிக்கொண்டிருந்த ஹர்ஷ் பதி (21) மீது கடும் பொறாமையில் பிளேடால் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் ஹர்ஷின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் உயிர் தப்பினார்.

பாதிக்கப்பட்ட ஹர்ஷ், அந்த பெண்ணுடன் தொடர்ந்து பேசுவதால் வருத்தமடைந்த அக்ஷத், “அவளை சந்திக்காதே” என ஏற்கனவே பலமுறை எச்சரித்திருந்ததாக கூறப்படுகிறது. ஜூலை 17ம் தேதி இருவரும் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அக்ஷத், பிளேடால் ஹர்ஷின் கழுத்தை வெட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாண்டவ் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அக்ஷத்தை தேடுவதற்காக, இரண்டு சிறப்பு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன. போலீசாரின் கண்காணிப்புடன், அவர் வீட்டிற்குத் திரும்பியபோது கைது செய்யப்பட்டார். விசாரணையில், தனது செயலை ஒப்புக்கொண்ட அக்ஷத், “அவளை சந்திக்கக் கூடாது என எச்சரித்தேன். அவன் கேட்காமல் பேசிக் கொண்டிருந்தான். அதனால் கோபத்தில் இப்படி செய்தேன்” என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவியதால், அது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இளம் தலைமுறையினர், உணர்ச்சி கட்டுப்பாடின்றி செயல்படுவதைப் போலி காதல் சம்பவங்கள் எவ்வளவு அபாயகரமானவையாக மாறுகின்றன என்பதற்கான கடும் எச்சரிக்கையாக இது விளங்குகிறது.