தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மியாபூர் பகுதியில் வசித்து வந்த விஜய் நாயக் – சின்மயி தம்பதியின் மகளான ஹன்சிகா (15), ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற தேர்வுக்காக பள்ளிக்கு சென்ற ஹன்சிகா, தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஹன்சிகா, வீட்டுக்கு வந்தபின் தாங்கள் வசிக்கும் 5வது மாடியில் இருந்து கீழே பாய்ந்தார். இந்த சம்பவத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து தெளிவான தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எந்தவொரு தற்கொலைக் குறிப்பு மீட்கப்படவில்லை. ஹன்சிகாவின் பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனை, காதல் தொடர்பான விஷயம் அல்லது பள்ளியின் நடவடிக்கை காரணமா என்பதையும் மியாபூர் போலீசார் விசாரணையின் கீழ் வைத்துள்ளனர்.

அதற்குமுன், ஹன்சிகாவின் சக வகுப்பு மாணவன் ஷேக் ரிஸ்வான் கடந்த வாரம் பள்ளியின் 5வது மாடியில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருவரும் சமூக வலைதளத்தில் நட்பு பேணி வந்ததாகவும், இதைப்பற்றி ஒரு ஆசிரியை முதல்வரிடம் புகாரளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து மாணவனின் தாயை பள்ளிக்கு அழைத்து ஆலோசனை நடைபெற்ற நேரத்திலேயே ரிஸ்வான் தற்கொலை செய்தார். இந்நிலையில் ஹன்சிகாவின் தற்கொலை விவகாரமும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.