கடந்த பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு, சுமார் மூன்று மாத இடைவெளிக்குப் பின் சென்னை மாநகராட்சியின் ஜூன் மாதத்திற்கான மாதாந்திர மன்றக்கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த காலத்தில் ஆற்றிய பணிகள் அனைத்தும் தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவே இருந்தன என்று குறிப்பிட்டார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமரவில்லை என்றாலும், திமுக கொண்டு வந்த திட்டங்களைத்தான் இன்றைய அரசு பெயர்களை மாற்றியாவது தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது என்றும், அப்படித்தான் இந்த அரசு நிலைக்க முடியும் என்றும் அவர் பேசினார்.

மேலும், முதல்வர் விஜய், அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் உலகளவில் நிச்சயமற்ற பொருளாதார சூழல் நிலவினாலும் இந்தியாவில் 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குவதாகவும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 45 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்றும் பெருமையுடன் குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் அனைத்தும் முந்தைய திராவிட மாடல் அரசின் முழு வெற்றிக்குக் கிடைத்த சான்றாகும் என்று மேயர் பிரியா சுட்டிக்காட்டினார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக கவுன்சிலர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடங்கள், ஸ்பான்ச் பூங்காக்கள், மழைநீர் வடிகால்கள், சமுதாய நலக்கூடங்கள், மேம்பாலங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த பள்ளி கட்டிடங்கள் என எண்ணற்ற பணிகளைச் செய்துள்ளதாக மேயர் தெரிவித்தார். இருப்பினும், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் 2 தொகுதிகள் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி வாய்ப்பை இழந்தன என்று குறிப்பிட்ட அவர், தற்போது நிலவி வரும் தொடர் மின்வெட்டு உள்ளிட்ட காரணங்களால், “ரீல்ஸ் பார்த்து ரியல் ஆட்சியை இழந்துவிட்டோமே” என மக்கள் வருந்திக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

திமுகவின் இந்தத் தோல்வி தற்காலிகமானதுதான் என்றும், கட்சி மீண்டும் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்த மேயர் பிரியா, மாமன்ற உறுப்பினர்கள் எவ்வித தொய்வும் இன்றி மக்கள் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.