மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் மதமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரில், தற்போது 4-வது பெண் ஒருவரின் அதிர்ச்சி வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ரசா மேமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில், ரசா மேமன் தன்னைத் தொடர்ந்து பின்தொடர்ந்ததாகவும், தேவையில்லாத நேரத்தில் மொபைலில் புதிர் கணக்குகளை அனுப்பி பதில் சொல்லுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அந்தப் பெண்ணின் திருமணத்திற்குப் பிறகு அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆபாசமான மற்றும் அநாகரீகமான கேள்விகளை ரசா மேமன் கேட்டு சித்ரவதை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து தனது மேலாளர்களிடம் புகார் அளித்தபோது, “நீ ஏன் வீணாக விளம்பரத்தைத் தேடுகிறாய்? இந்த விஷயத்தை இதோடு விட்டுவிடு” என்று கூறி அவர்கள் ரசா மேமனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ரைசா மேமனின் நண்பர்களான டேனிஷ் மற்றும் தௌசிஃப் ஆகியோரும் சேர்ந்து, அந்தப் பெண்ணின் வேலைப்பளுவை அதிகரிக்கும் வகையில் கணினி அமைப்புகளை மாற்றியமைத்து துன்புறுத்தியுள்ளனர்.
மதமாற்றம், பாலியல் தொல்லை மற்றும் பணியிட துன்புறுத்தல் எனப் பல கோணங்களில் இந்த வழக்கை நாசிக் போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். கார்ப்பரேட் நிறுவனத்திற்குள் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் தொழில்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
