கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஒரு வீட்டின் அருகே ஒரே நேரத்தில் 26 நாகப்பாம்புகள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வயநாட்டின் குடியிருப்புப் பகுதி ஒன்றில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் பெரிய நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்ட உரிமையாளர், உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரர்கள், அந்தப் பெரிய பாம்பைப் பிடித்தபோதுதான் அவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.
அந்த இடத்தைச் சுற்றி மறைவான பகுதிகளில் அடுத்தடுத்து 25 நாகப்பாம்பு குட்டிகள் பதுங்கியிருந்தன. சற்றும் தாமதிக்காமல் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தாய் நாகப்பாம்பையும், அதன் 25 குட்டிகளையும் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
பிடிபட்ட அனைத்துப் பாம்புகளும் மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டன. ஒரே இடத்தில் இத்தனை பாம்புகள் பிடிபட்ட தகவல் பரவியதை அடுத்து, அந்த கிராமமே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனது. இச்சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.
