உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் பகுதியில், தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 5 மாதமே ஆன பச்சிளம் குழந்தையை மொட்டை மாடியிலிருந்து கீழே வீசிக் கொன்ற தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பதாயூன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், தன்  மனைவியின் தாய் வீட்டில் தங்கியிருந்தனர். நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில், கணவன்-மனைவி இடையே திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவியை உடனடியாகத் தன்னுடன் கிளம்பி வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.

மனைவி வர மறுத்ததால், ஆவேசத்தின் உச்சத்துக்கே சென்ற அந்த நபர், தனது 5 மாத ஆண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றார். குழந்தையை மாடியின் விளிம்பில் அந்தத் தந்தை அந்தரத்தில் தொங்கவிட்டபடி, “இப்பொழுது கிளம்பி வராவிட்டால் குழந்தையைக் கீழே வீசிவிடுவேன்” எனத் தனது மனைவியை மிரட்டியுள்ளார்.

நிலைமையைக் கண்டு பதறிப்போன மனைவி மற்றும் உறவினர்கள் கெஞ்சியபோதும், எதையும் செவிமடுக்காத அவர், கண்ணிமைக்கும் நேரத்தில் பச்சிளம் குழந்தையை மாடியிலிருந்து கீழே வீசினார். சுமார் 20 அடி உயரத்தில் இருந்து வீசப்பட்ட அந்த குழந்தை, தரையில் விழுந்த வேகத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், அந்த நபரைப் பிடித்து ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டினர்.

தகவலறிந்து இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தப்பியோட முயன்ற அந்த நபரை கைது செய்தனர். குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்பத் தகராறில் பெற்ற மகனையே தந்தை கொன்ற இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.