நிதா அம்பானி போன்ற பெரும் கோடீஸ்வரர்களின் ஆபரணச் சேகரிப்புகள் உலக அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்தியத் தொழில்முனைவோர் நடாஷா பூனாவல்லாவின் வசமுள்ள ஒரு அபூர்வ வைர மோதிரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ராணி மேரி அன்டோனெட் பயன்படுத்தியதாகக் கருதப்படும் ‘மேரி-தெரசா’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இளஞ்சிவப்பு வைர மோதிரமே இதுவாகும். 10.38 கேரட் எடையுள்ள இந்த ‘பர்பிள்-பிங்க்’ நிற வைரம், 18-ஆம் நூற்றாண்டில் மேரி அன்டோனெட் தனது மகளுக்குப் பரிசாக வழங்கியது என்ற பெருமைக்குரியது.

பல தலைமுறைகளாக ஐரோப்பிய அரச குடும்பங்களின் வசம் இருந்த இந்த வைரம், சமீபத்தில் கிரிஸ்டி (Christie’s) ஏல நிறுவனத்தின் மூலம் விற்பனைக்கு வந்தபோது சுமார் ₹126 கோடிக்கு (13.98 மில்லியன் டாலர்) ஏலம் போனது.

நவீன காலத்தின் தலைசிறந்த ஆபரண வடிவமைப்பாளரான ஜோயல் ஆர்தர் ரோசெந்தால் என்பவரால் இந்த வைரம் மிக நேர்த்தியான கருப்பு பிளாட்டின மோதிரமாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில், இதன் மதிப்பு 3 முதல் 5 மில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையில் இருமடங்கு அதிக விலைக்கு இது விற்பனையானது. நடாஷா பூனாவல்லாவின் இந்த பிரம்மாண்ட சேகரிப்பு குறித்த தகவல்களை நகை நிபுணர் த்ருமித் மெருலியா சமூக வலைதளங்களில் பகிர்ந்ததை அடுத்து, அரிய வைரங்களைச் சேகரிக்கும் உலகின் மிகச்சில முக்கிய மனிதர்களில் ஒருவராக நடாஷா பூனாவல்லா தற்போது முன்னிலை பெற்றுள்ளார்.