கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கடன் விவகாரத்தில் ஊர் மத்தியில் அவமானப்படுத்தப்பட்ட கூலித்தொழிலாளி, மனவேதனையில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கொட்டாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேலுமணி (53), கூலித்தொழிலாளி. இவரிடம் மண்ணாடிப்பட்டியைச் சேர்ந்த தமிழ்வாணன் மற்றும் தனபால் (63) ஆகிய இருவரும் ரூ.50 ஆயிரம் கடன் கேட்டுச் சென்றுள்ளனர். “பணத்தைத் திருப்பிச் செலுத்திவிட்டேன், அதற்கான ஆதாரம் உள்ளது” என்று வேலுமணி கூறியதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தமிழ்வாணன் மற்றும் தனபால் ஆகிய இருவரும் வேலுமணியைத் தடியால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவரது கழுத்தில் துண்டைப் போட்டு கட்டி, வீட்டில் இருந்து தெரு வழியாகத் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். அருகில் இருந்த கோயில் அருகே அவரை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். பொதுமக்கள் முன்னிலையில் இத்தகைய இழிவான செயலுக்கு ஆளானதால் வேலுமணி கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதற்கிடையே, அன்று மாலை வெளியில் சென்று திரும்பிய வேலுமணி, தான் விஷம் குடித்துவிட்டதாக மனைவி அம்பிகாவிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். வேலுமணியின் தற்கொலைக்குக் காரணமான தனபால் என்பவரைப் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தமிழ்வாணன் என்பவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.