சென்னையில் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்கள் இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் மொய்தீன் (27) மற்றும் ஜாபர் சாதிக் (25). இவர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் ஒருவனை ஆசை வார்த்தை கூறி கடந்த 4 மாதங்களாகத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அந்தச் சிறுவனுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து (ஓரினச் சேர்க்கை) வந்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது எனச் சிறுவனை அவர்கள் மிரட்டியுள்ளனர். மேலும், சிறுவனைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவ்வப்போது உணவு மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்து ஆசை காட்டியுள்ளனர்.

சிறுவனின் நடத்தையில் மாற்றத்தைக் கண்ட பெற்றோர், அவரிடம் விசாரித்தபோது நடந்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மொய்தீன் மற்றும் ஜாபர் சாதிக் ஆகிய இருவரையும் தேடிப் பிடித்தனர். அவர்கள் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.