நெல்லை மாவட்டத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதியின் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மிக முக்கிய மற்றும் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்களின் அஸ்தியைக் கரைப்பதற்குத் தடையின்றி அனுமதி வழங்கப்பட்டாலும், ஈமச்சடங்கு மற்றும் இறுதிச் சடங்குகள் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் மற்றும் அஸ்தி பானைகளை ஆற்றுக்குள் அப்படியே வீசிச் செல்வதை எவ வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
நதியின் தூய்மையைக் கெடுக்கும் இது போன்ற நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த நீராதாரம் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக நீதிபதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, இறுதிச் சடங்குகளை நடத்துபவர்கள் ஆற்றை அசுத்தப்படுத்துவதைத் தடுத்து நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாகத் தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தாமிரபரணி ஆற்றுப் படுகைப் பகுதிகளை மாசுபடுத்தும் நபர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் வகையில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் உடனடியாக உரிய தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் குடிநீர் ஆதாரமான இந்த நதியைப் பாதுகாக்க அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அதிரடி உத்தரவு தற்போது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
