கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மருமகளைத் தலையைத் துண்டித்துக் கொலை செய்து, உடல் பாகங்களை ஆற்றில் புதைத்த மாமியார் மற்றும் அவரது தோழியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

விரியூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் மரியா ரொசாரியோ. இவருக்கும் நந்தினி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி நந்தினியைக் காணவில்லை என மரியா ரொசாரியோ காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரில், தனது தாய் கிறிஸ்டோபர் மேரியுடன் வெளியே சென்ற நந்தினி வீடு திரும்பவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

சந்தேகத்தின் அடிப்படையில் மரியாவின் தாயார் கிறிஸ்டோபர் மேரியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், தனது மருமகளைத் திட்டமிட்டுக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: “கோயிலுக்குச் செல்லலாம் என ஆசை வார்த்தை கூறி நந்தினியை மணிமுத்தாறு ஆற்றுப்பகுதிக்கு கிறிஸ்டோபர் மேரி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே காத்திருந்த தனது தோழி எமிலியாவுடன் சேர்ந்து நந்தினியைத் தாக்கி, தலையைத் துண்டித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் உடலையும், தலை உள்ளிட்ட பாகங்களையும் தனித்தனி இடங்களில் ஆற்றில் புதைத்துவிட்டு எதுவுமே தெரியாதது போல் வீடு திரும்பியுள்ளார்.”

கொலையுண்ட நந்தினிக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இந்தத் திருமணத்தில் கிறிஸ்டோபர் மேரிக்கு விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடந்த 3 மாதங்களாகத் திட்டமிட்டு இந்தத் துணிகரக் கொலையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

தகவல் அறிந்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் மணிமுத்தாறு ஆற்றுப்பகுதிக்கு விரைந்துள்ளனர். நந்தினியின் உடல் பாகங்களைத் தோண்டி எடுக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.