சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காகத் தனக்கு ரூ.35 கோடி சன்மானம் தருவதாகச் சிலர் பேரம் பேசியதாகக் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்த அதிரடி புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் இதுவரை 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

​இந்த குதிரை பேர வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேதுராஜ் மற்றும் நரேஷ் ஆகிய இருவர், தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். சட்டமன்ற உறுப்பினரையே கோடிக்கணக்கில் பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயன்றதாக எழுந்த இந்தக் குற்றச்சாட்டு, தமிழக அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

​இந்த ஜாமீன் மனுக்கள் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதாடுகையில், “இந்த வழக்கில் ஏற்கனவே தொடர்புடைய 3 பேருக்கு நீதிமன்றம் ஜாமீனும், மேலும் 3 பேருக்கு முன்ஜாமீனும் வழங்கியுள்ளது. எனவே, அதே அடிப்படையில் தற்போதைய மனுதாரர்களான சேதுராஜ் மற்றும் நரேஷிற்கும் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

​இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கைது செய்யப்பட்ட மனுதாரர்களின் ஜாமீன் மனுக்கள் தொடர்பாகக் காவல்துறை தரப்பில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் அரங்கேறிய இந்த 35 கோடி ரூபாய் குதிரை பேர விவகாரம், தற்போது நீதிமன்ற விசாரணை மூலம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.