2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ‘உங்கள் விஜய் – நான் வரேன்’ என்ற பேரில் மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த 13 ஆம் தேதி திருச்சியில் இந்த பயணத்தை தொடங்கிய அவர், ஒவ்வொரு சனிக்கிழமையிலும் பரப்புரை செய்து வருகிறார். இதற்கமைய, கடந்த இரண்டு வாரங்களில் திருச்சி, அரியலூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மக்களுடன் நேரில் சந்தித்து உரையாடினார்.

இந்நிலையில், வரும் செப்டம்பர் 27ஆம் தேதி (சனிக்கிழமை), நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பரப்புரை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில், விஜய் சனிக்கிழமைகளில் மட்டுமே வெளியே வருவது குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதற்குப் பதிலளித்த விஜய், “மக்கள் சந்திப்பில் எந்த தொந்தரவும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே சனிக்கிழமையை தேர்வு செய்தேன்” என விளக்கம் அளித்தார்.

இந்த சூழலில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார். சென்னை நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் வெறும் சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல; வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் வெளிநாட்டில் இருப்பேன். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட சுற்றுப்பயணத்தில் இருப்பேன்,” எனக் கூறினார்.

மேலும் விஜயின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமலேயே, அவரை நோக்கி கூறப்பட்ட இந்தக் கருத்து, அண்மையில் விஜய் எடுத்த முடிவை மறைமுகமாக விமர்சிக்கிறது என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.