வீட்டிலிருந்தே வேலை செய்யும் ‘வொர்க் ஃபிரம் ஹோம்’ கலாச்சாரம் தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. ரயில்கள், விமான நிலையங்கள் மற்றும் கடற்கரைகள் என மக்கள் தங்களுக்கு வசதியான இடங்களிலிருந்து அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வரிசையில், தற்போது ஒரு நபர் சஹாரா பாலைவனத்தின் நடுவே ஒட்டகத்தின் மீது அமர்ந்து கொண்டு, தனது மடிக்கணினியில் அலுவலக ஜூம் மீட்டிங்கில் கலந்துகொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அக்தர் என்ற பயனர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், அந்த நபர் பாலைவன மணல் பரப்பில் ஒட்டகத்தின் மீது அமர்ந்து கொண்டு மிக நிதானமாக மீட்டிங்கில் பங்கேற்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பார்த்த பலரும், அந்த நபரின் அர்ப்பணிப்பைக் கண்டு வியந்து கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “ஒட்டகத்திலும் கேபிஐ இலக்குகள் இருக்கின்றனவா?”, “அவர் பாக்கெட்டில் ஸ்டார்லிங்க் இணைய வசதி வைத்துள்ளாரா?” என்பது போன்ற நகைச்சுவையான கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

மேலும், சிலர் இதைத் தங்களது கனவு வேலை என்றும், இதை ‘வொர்க் ஃபிரம் கேமல்’ என்று பெயரிட்டும் அழைத்து வருகின்றனர். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சமநிலை என்பதற்கு இது ஒரு புதிய பரிமாணம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.