கனடாவின் வான்கூவரில் உள்ள பெட்ரோல் நிலையமொன்றில் பணிபுரிந்து வரும் தேவிக்கா என்ற இந்தியப் பெண், வாடிக்கையாளர் ஒருவரால் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெட்ரோல் நிரப்புவதற்காக அந்த வாடிக்கையாளர் செலுத்திய முன் பணம், மீதம் இருக்கும்போது தானாகவே அவரது கார்டுக்குத் திரும்பச் சென்றதை விளக்க முற்பட்டபோது, ஆத்திரமடைந்த அந்தப் பெண் தேவிக்காவைத் தரக்குறைவாகப் பேசி, “உன் நாட்டிற்குத் திரும்பிப் போ” என்று இனவெறியுடன் திட்டியுள்ளார்.

அந்தப் பெண் தன்னை ஒரு செவிலியர் என்று சொல்லிக்கொண்டே இப்படி அநாகரிகமாக நடந்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேவிக்கா, மிகுந்த பொறுமையுடனும் கண்ணியத்துடனும் அவருக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

தனது பெற்றோர் எனக்கு நற்பண்புகளைக் கற்றுக்கொடுத்துள்ளனர் என்று அந்தப் பெண்ணுக்குச் சுட்டிக்காட்டிய தேவிக்காவின் தைரியமான செயலை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இனவெறியை எதிர்த்துப் பேசிய தேவிக்காவுக்கு ஆதரவாகப் பல இந்தியர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

அதேவேளையில், வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிராக இதுபோன்ற இனவெறிச் சம்பவங்கள் அதிகரித்திருப்பது கவலையளிப்பதாகவும், இதை இனியும் சகித்துக்கொள்ளக் கூடாது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இச்சம்பவம், பணியிடங்களில் புலம்பெயர்ந்தோர் சந்திக்கும் சவால்களையும், இனவெறிக்கு எதிரான விழிப்புணர்வையும் மீண்டும் ஒருமுறை மக்கள் மத்தியில் உரக்கப் பேச வைத்துள்ளது.