குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விஷால் சாவ்தா என்ற தலித் இளைஞரின் திருமண ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் மணமகன் விஷால் குதிரை மீது அமர்ந்து ஊர்வலமாகச் சென்றபோது, அங்கு வந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு கும்பல், “தலித் சமூகத்தினர் எப்படி குதிரை சவாரி செய்யலாம்?” எனக் கூறி ஊர்வலத்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டது. ஆத்திரமடைந்த அக்கும்பல், மணமகனை குதிரையிலிருந்து வலுக்கட்டாயமாக கீழே இழுத்துத் தள்ளி சரமாரியாகத் தாக்கியதுடன், தடுக்க வந்த உறவினர்களையும் கத்திகள் மற்றும் கட்டைகளால் கொடூரமாகத் தாக்கியதில் பலருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மணமகன், பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் காரில் சென்று திருமணச் சடங்குகளை முடித்தார். இச்சம்பவம் தொடர்பாக சைலேஷ் தாகூர், ஜெயேஷ் தாகூர் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், கிராமத்தில் மேலும் வன்முறை வெடிக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குஜராத்தில் தலித் மணமகன்கள் குதிரை ஏறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்கதையாகி வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
