தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வரும் வன்கொடுமைகளுக்குப் பொறுப்பேற்று, முதல்வர் விஜய் ஏன் தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடாது என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பேசிய அவர், தற்போதைய சூழலில் நானாக இருந்தால் உடனடியாக எனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பேன் என்று ஆவேசத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இதுகுறித்து தனது ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த எச்.ராஜா, நிர்வாகத் திறனற்ற தவெக அரசால் தமிழ்நாட்டில் தினம்தோறும் பெண்களும், குழந்தைகளும் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர் என்று சாடியுள்ளார். மேலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்றும், இதுபோன்ற அத்துமீறல்களும் வன்கொடுமை நிகழ்வுகளும் இனிமேல் தமிழகத்தில் நடக்காதவாறு அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
