தமிழகத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்கும், கல்வித் தர மேம்பாட்டிற்கும் அடித்தளமாக விளங்கும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் (VC) பதவிகள் நீண்டகாலமாக காலியாக இருப்பது மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 22 மாநிலப் பல்கலைக்கழகங்களில், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார், பெரியார், மதுரை காமராஜர் உள்ளிட்ட 16 முக்கியப் பல்கலைக்கழகங்கள் நிரந்தரத் துணைவேந்தர் இல்லாமல் இயங்குவது உயர்கல்வித் துறையின் நிர்வாக செயல்பாடுகளையே முடக்கும் அளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சாடியுள்ளார்.
துணைவேந்தர்கள் இல்லாததால் செனட், சிண்டிகேட் கூட்டங்கள் முறையாக நடக்காமலும், புதிய பாடத்திட்டங்கள், ஆராய்ச்சி நிதிகள் பெறுவது போன்ற முக்கியப் பணிகள் பாதிக்கப்பட்டு தேசிய தரவரிசையான NIRF மற்றும் NAAC மதிப்பீடுகளில் தமிழகப் பல்கலைக்கழகங்களின் நிலை பின்னோக்கிச் செல்லும் அபாயம் உருவாகியுள்ளது என்று ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
தமிழக அரசுக்கும் கவர்னர் மாளிகைக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதால், உயர்கல்வித் துறை அமைச்சர் நேரடியாக கவர்னருடன் கலந்தாலோசித்து, சுமுகமான தீர்வு கண்டு அனைத்துத் துணைவேந்தர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
