தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி தவெக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அதிமுகவில் பெரும் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் புதிய தனி அணி உருவானது.

இந்த அணியைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததும், அதில் 4 பேர் பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் ஐக்கியமானதும், மீதமுள்ள 21 பேர் மன்னிப்புக் கடிதம் கொடுத்ததால் அவர்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டதும் என அதிமுகவில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

​இந்த அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் தொடர்ந்து விலகி தவெக-வில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து அதிரடிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல, அது அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு என்று குறிப்பிட்டுள்ள அவர், உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை மக்களின் மனதை எப்படி வெல்லும் என்றும், உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா என்றும் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.