சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் வேலை பார்த்து வந்த காவலாளி அஜித் குமார் நகை திருட்டு தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணையை அரசு சிபிஐ க்கு மாற்றியது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த சிபிஐ அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாய், சகோதரர் மற்றும் நண்பர்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் நகை திருட்டுத் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண் நிகிதாவை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
ஏற்கனவே நிகிதா அளித்த புகாரில் கடந்த ஜூன் 27ஆம் தேதி பார்க்கிங் செய்து தருமாறு கோயில் காவலாளி அஜித் குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், அதை அவர் அருகில் உள்ள ஆட்டோ டிரைவரான அருணிடம் கொடுத்து பார்க்கிங் செய்யுமாறு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் சாவியை நீண்ட நேரம் கழித்து நிகிதாவிடம் அஜித் குமார் கொடுத்ததாகவும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது, காரை நிகிதாவே ஓட்டி சென்று மீண்டும் அவரே ஒட்டி வருவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது.
நிகிதாவின் காரை மடப்புரம் கோயிலில் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அடுத்த 2 நிமிடத்தில் கார் சாவியை அஜித்குமார் நிகிதாவிடம் ஒப்படைத்துள்ளார். அதன் பின்னர் 8 நிமிடத்தில் பார்க்கிங்கில் இருந்து காரை எடுத்து வந்து கொடுத்துள்ளனர். நிகிதா கோயிலின் உள்ளே சென்று வெளியே வரும் வரை கார் வேறு எங்கும் வெளியே செல்லவில்லை என்பதும் சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகியுள்ளது.
இருப்பினும் சிபிஐ அதிகாரிகளின் விசாரணையில் நிகிதா கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முரண்பாடாக பதில் அளித்துள்ளதால் அஜித் குமார் மீது நிகிதா பொய் புகார் அளித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
