மேற்கு ஆசியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான அமெரிக்கக் கடற்படை வீரர்களின் (US Marines) தனிப்பட்ட தகவல்களை ஈரான் ஆதரவு ஹேக்கர்கள் இணையத்தில் கசியவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஹண்டாலா’ (Handala) என்ற பெயரில் இயங்கும் இந்த ஹேக்கர் குழு, சுமார் 2,379 வீரர்களின் பெயர்கள் உள்ளிட்ட ரகசிய விவரங்களை டெலிகிராம் செயலி மூலம் வெளியிட்டுள்ளது.

தகவல்களைக் கசியவிட்டது மட்டுமின்றி, அந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க வீரர்களின் வாட்ஸ்அப் எண்களுக்கு மிரட்டல் செய்திகளையும் ஹேக்கர்கள் அனுப்பியுள்ளனர். “நீங்கள் எங்கள் கண்காணிப்பில் உள்ளீர்கள்” என்று எச்சரித்துள்ள அந்த அமைப்பு, வீரர்களின் குடும்பத்தினர், வீட்டு முகவரி மற்றும் தினசரி நடவடிக்கைகள் குறித்த விவரங்களும் தங்களிடம் இருப்பதாகக் கூறியுள்ளது. இது குறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், முதற்கட்ட ஆய்வில் கசிந்த தகவல்கள் உண்மையானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் மூன்றாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் ஈரான் புதிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் வகையில் ‘ஹார்முஸ் நீரிணை’ பகுதியில் நீண்டகால கடற்படை முற்றுகையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். வான்வழித் தாக்குதல்களை விடவும், கடற்படை முற்றுகை ஈரானுக்கு அதிகப் பொருளாதார நெருக்கடியைத் தரும் என ட்ரம்ப் கருதுகிறார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய டொனால்ட் ட்ரம்ப், “ஈரான் தற்போது நிலைகுலைந்த நிலையில் உள்ளது. தனது ஆட்சியையும் பொருளாதாரத்தையும் நிலைநிறுத்த ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க அந்நாடு விரும்புகிறது. இதற்காக கடற்படை முற்றுகையை விலக்கக் கோரி ஈரான் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது” என்றார்.

அணுசக்தி திட்டங்கள் குறித்த சிக்கலான பேச்சுவார்த்தைகளைத் தள்ளிவைத்துவிட்டு, ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஒரு இடைக்கால ஒப்பந்தத்திற்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த நீரிணையின் சில பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என ஈரான் பிடிவாதம் காட்டுவதால், இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

உலக அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையில் நிலவும் இந்த இழுபறியால், சர்வதேசச் சந்தையில் எரிசக்தி விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.