வீட்டு வளர்ப்புப் பிராணியைத் துன்புறுத்திய தனது மகனுக்கு, தாய் ஒருவர் கொடுத்த நூதனத் தண்டனை தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் தனது வீட்டுப் பூனையை ஆத்திரத்தில் தூக்கிப் போட்டு அடித்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவனது தாய், உடனடியாக ஒரு அதிரடி முடிவை எடுத்தார். விலங்குகளிடம் கருணை காட்டாத மகனுக்கு ஒரு பாடம் புகட்ட நினைத்த அவர், அந்தச் சிறுவனுக்கு மிகவும் பிடித்தமான பிஎஸ்5 (PS5) கேமிங் கன்சோலை எடுத்து வரச் சொன்னார்.
She stood there, shaking, replaying what she had just seen; her son slamming the family’s pet cat in anger. The shock hadn’t worn off, and neither had the fear. So she made a decision in the heat of the moment: she handed him his PS5 and told him to slam it the same way… to feel… pic.twitter.com/8uQOy5xrFb
— Dr.L (@DrAlmarielao) April 28, 2026
“பூனையை எப்படித் தூக்கிப் போட்டாயோ, அதேபோல உனக்குப் பிடித்தமான இந்த விளையாட்டுக் கருவியையும் தூக்கிப் போட்டு உடை” என அந்தத் தாய் உத்தரவிட்டார். மனவேதனையுடன் அந்தச் சிறுவன் தனது விலையுயர்ந்த பிஎஸ்5-ஐ கீழே போட்டு உடைக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு தரப்பினர், “சிறு வயதிலேயே வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்துவது ஆபத்தானது, அவனுக்குப் புரிகிற மொழியில் தண்டனை கொடுத்தது சரிதான்” எனத் தாய்க்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
மறுபுறம், “கோபத்தைக் கோபத்தால் கையாளுவது சரியான வளர்ப்பு முறை அல்ல. ஒரு பொருளை உடைக்கச் சொல்வது அந்தச் சிறுவனுக்கு இன்னும் ஆத்திரத்தையே உண்டாக்கும்.
அவனுக்குத் தேவை மனநல ஆலோசனையே தவிர, இது போன்ற தண்டனைகள் அல்ல” என விமர்சித்து வருகின்றனர். வன்முறை என்பது மற்றொரு வன்முறையைத்தான் உருவாக்கும் எனப் பல சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ள நிலையில், ‘சரியான வளர்ப்பு முறை எது?’ என்ற விவாதம் தற்போது உலகளவில் சூடுபிடித்துள்ளது.
