அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈரானின் அணுகுமுறையை கடுமையாகச் சாடியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்நாடு விரைவில் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஈரானால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அணுசக்தி அல்லாத ஒப்பந்தத்தில் எப்படி கையெழுத்திடுவது என்று கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் விரைவில் புத்திசாலித்தனமாகச் செயல்படுவது நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவுடன், கருப்பு நிற உடையில் கையில் இயந்திரத் துப்பாக்கியுடன்  தான் இருப்பது போன்றும், பின்னணியில் ஈரான் நிலப்பரப்பு வெடித்துச் சிதறுவது போன்றும் உள்ள ஒரு ‘ஏஐ’ (AI) புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் “இனிமேல் நான் நல்லவன் கிடையாது” (No more Mr. nice guy) என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் மீண்டும் முற்றுகையைத் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவும் தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்த மறுத்து வருகிறது. இதனால் ஈரானின் பொருளாதாரம் மற்றும் ஆட்சி நிர்வாகம் சரிவின் விளிம்பில் இருப்பதாகவும், ஹார்முஸ் நீரிணையைத் திறக்க உதவுமாறு ஈரான் தரப்பில் இருந்து வாஷிங்டனுக்குத் தகவல் வந்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஈரான் தரப்பு தங்களின் நிபந்தனைகள் அடங்கிய பட்டியலை வழங்கிவிட்டுச் சென்றதையடுத்து, அமெரிக்கத் தூதுக்குழுவை இஸ்லாமாபாத்திற்கு அனுப்பப் போவதில்லை என ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தற்போது முடங்கியுள்ளன.