மகாராஷ்டிர மாநிலம் உஸ்மனாபாத் மாவட்டம் உமர்கா தாலுகாவில் உள்ள பேரட்வாடி பூஸ்னி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவி மற்றும் 8 வயது மகளைக் கணவனே கோடாரியால் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள அஜித் அபன்னா வாசுதேவ் என்பவர், தனது மனைவி லிம்புபாயின் நடத்தையில் சந்தேகமடைந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) நள்ளிரவில் வீட்டின் உள்ளே தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த அஜித் அங்கிருந்த கோடாரியை எடுத்துத் தனது மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
தாய் வெட்டப்படுவதைப் பார்த்த 8 வயது மகள் மானசி, அலறியபடி தடுக்க முயன்றுள்ளார். தான் கொலை செய்வதைச் சிறுமி பார்த்துவிட்டதால், சாட்சியை அழிக்க நினைத்த அஜித், தனது பெற்ற மகள் என்றும் பாராமல் மானசியையும் கோடாரியால் வெட்டிச் சாய்த்தார். இச்சம்பவத்தின் போது வீட்டில் இருந்த மகன், தந்தையின் ஆக்ரோஷத்தைக் கண்டு அங்கிருந்து தப்பியோடியதால் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார்.
கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, நள்ளிரவு 2 மணி அளவில் அஜித் நேரடியாக காவல் நிலையத்திற்குச் சென்றார். “நான் எனது மனைவி மற்றும் மகளைக் கோடாரியால் வெட்டிக்கொன்றுவிட்டேன்” என்று கூறி அவர் சரணடைந்ததைக் கேட்டுப் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த காவல் உதவி ஆய்வாளர் டாக்டர் சந்தீபன் தஹிபலே தலைமையிலான போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரின் உடல்களையும் மீட்டனர். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக முரூம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரிது கோகர், துணை கண்காணிப்பாளர் சதாசிவ ஷெலார் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நாகநாத் ஷெம்லே என்பவர் அளித்த புகாரின் பேரில், அஜித் அபன்னா வாசுதேவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் குடும்பத் தலைவனே மனைவியையும் பிஞ்சு மகளையும் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
