உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவின் ஆஷியானா பகுதியில், மழையில் இருந்து தப்பிக்கக் கட்டுமானப் பணி நடைபெறும் கட்டிடத்தில் ஒதுங்கிய 13 வயது சிறுமி, 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் லக்னோவில் தங்கி வேலை செய்து வருகிறது. சிறுமியின் தந்தை கொத்தனாராகவும், தாய் வீடுகளில் வேலை செய்பவராகவும் உள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சிறுமி வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்றும் மழையும் பெய்ததால், தற்காப்பிற்காக வழியில் இருந்த ஒரு கட்டுமானக் கட்டிடத்தில் சிறுமி ஒதுங்கியுள்ளார்.

அங்கு மறைந்திருந்த 17 வயது சிறுவன் மற்றும் அவனது நண்பர்கள் சிறுமியைத் தனிமையில் கண்டதும் சுற்றி வளைத்தனர். சிறுமி எதிர்ப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், அவரை சரமாரியாகத் தாக்கியது. அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க சிறுமியின் வாயில் துணியைத் திணித்ததோடு, கை கால்களையும் கட்டிப் போட்டுள்ளனர். பின்னர் அந்த 17 வயது சிறுவன் மற்றும் அவனது நண்பர்கள் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

வேலைக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அச்சமடைந்த பெற்றோர் தேடி அலைந்தனர். கட்டுமானக் கட்டிடத்தின் அருகே சந்தேகம் ஏற்பட்டு அவர்கள் சத்தமிட்டபடி உள்ளே நுழைந்தனர். இதைக் கண்டு பயந்த காமப்பேய்கள், கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்துத் தப்ப முயன்றனர். இதில் இருவருக்குக் காயம் ஏற்பட்டதால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

கட்டிடத்திற்குள் சென்ற பெற்றோர், சிறுமி அரைகுறை ஆடையுடன், மயங்கிய நிலையில் கை கால்கள் கட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டு கதறி அழுதனர். உடனடியாகக் கட்டுகள் அவிழ்க்கப்பட்டுச் சிறுமி மீட்கப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது லோக் பந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து டிசிபி விக்ராந்த் வீர் கூறுகையில், சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 17 வயது முக்கியக் குற்றவாளி மற்றும் அவனது நண்பர்கள் உட்பட 5 பேர் மீது போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பவத்தின் போது மற்ற நண்பர்களின் பங்கு என்ன என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெறுகிறது” எனத் தெரிவித்தார்.