தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய், சுமார் ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக சமூக ஊடகங்களில் தனிப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளம் வாக்காளர்களை கவருவதற்காக சமூக வலைதள பக்கங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், அரசியல் கட்சிக்காக பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கும் பணியிலும் விஜய் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கினார். நாள், நட்சத்திரம் பார்க்காமல் பெரியார் காட்டிய பகுத்தறிவு பாதையில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். பகுத்தறிவுக் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகளே நாள் நட்சத்திரம் பார்த்து அறிவிப்புகளை வெளியிடும் சுழலில், சடங்கு சம்பிரதாயங்களை உடைத்தெறிந்து கவனம் ஈர்த்துள்ளார் விஜய்.