பாம்பு என்றாலே பெரும்பாலானோர் அச்சத்தில் உறைந்து போவார்கள். திடீரென பாம்பைக் கண்டால், உடனடியாக அந்த இடத்தை விட்டு விலகிச் செல்வதே பொதுவான மனிதர்களின் இயல்பு. ஆனால், பாம்புகளை கையாள்வது அன்றாடப் பணியாக உள்ள பாம்பு பிடிப்பவர்கள் மற்றும் மீட்பு நிபுணர்கள் இதற்கு விதிவிலக்காக உள்ளனர்.

இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் ஒரு காணொளி, அனுபவம் மிக்கவர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அந்த காணொளியில், ஒரு பாம்பு பிடிப்பவர் பச்சை நிற வைன் பாம்பை (Green Vine Snake) கையில் பிடித்தபோது, அந்த பாம்பு அவரது மணிக்கட்டில் கடித்தது. பாம்பின் கூர்மையான கோரைப் பற்கள் அவரது கையில் ஆழமாகப் பதிந்திருந்த போதும், அந்த நபர் எவ்வித பதற்றமுமின்றி அமைதியாக நடந்துகொண்டார்.

காணொளியில், பாம்பு கடித்த நிலையிலேயே அவர் கேமராவிற்கு விளக்கம் அளிக்கிறார். இது ‘மெல்லும் கடி’ (Chewing Bite) என அழைக்கப்படுவதாகவும், பாம்பு தனது உமிழ்நீரை உடலில் செலுத்தும் வரை பிடியை விடாது என்றும் அவர் கூறுகிறார். மேலும், பாம்பு தரையில் ஆதரவை உணரும்போது அதன் பிடி தளரத் தொடங்கும் என்பதால், அவசரப்படவோ வலுக்கட்டாயமாக பாம்பை பிரிக்க முயற்சிக்கவோ கூடாது என விளக்குகிறார்.

 

சுமார் 52 விநாடிகள் நீளமான அந்த காணொளியின் முடிவில், பாம்பு மெதுவாக தனது பிடியை தளர்த்தி, அந்த நபரின் கையை விட்டுவிடுகிறது. இதனைத் தொடர்ந்து வெளியான மற்றொரு காணொளியில், அவர் பாம்பை பாதுகாப்பாக ஒரு பையில் வைத்து, தனது மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தை காட்டுகிறார். காயம் இருந்தபோதும், அதை அவர் சாதாரணமாகவே எடுத்துக்கொண்டார்.

மேலும், பச்சை வைன் பாம்பு விஷமற்றது என்றும், அதன் கடி பொதுவாக உயிருக்கு ஆபத்தானது அல்ல என்றும் அவர் தெரிவித்தார். அதிகபட்சமாக வலி, எரிச்சல் அல்லது லேசான வீக்கம் ஏற்படக்கூடும் என்றார். பாம்புகளைக் கண்டால் பீதி அடையாமல், அவற்றுக்கு தீங்கு விளைவிக்காமல் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த காணொளி இன்ஸ்டாகிராமில் @snakerescueindia என்ற கணக்கில் பகிரப்பட்டு, பரவலாக கவனம் பெற்றுள்ளது. அனுபவம் மற்றும் பயிற்சி இல்லாதவர்கள் இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விஷமற்ற பாம்புகளின் கடியாலும் தொற்று அல்லது கடுமையான காயங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.