இந்திய ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஒரு லிட்டர் ‘ரயில்வே நீர்’ பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் விவகாரம் சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 22, 2025 முதல் ஒரு லிட்டர் ரயில்வே நீர் பாட்டிலின் விலை 15 ரூபாயிலிருந்து 14 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

Passanger vs Railway Pantry staff over overcharging water bottle
byu/Altruistic-Issue-887 inIndiaFreakoutDesi

இதேபோல் 500 மில்லி பாட்டிலின் விலை 9 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல ரயில்களில் ‘பேண்ட்ரி’ ஊழியர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பயணிகளிடம் 20 முதல் 30 ரூபாய் வரை சட்டவிரோதமாக வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய விதிமீறல்களில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என இந்திய ரயில்வே கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தவிர்க்க, பயணிகள் பாட்டிலில் அச்சிடப்பட்டுள்ள விலையைச் சரிபார்த்து அதன்படி மட்டுமே பணம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகக் கோரும் பட்சத்தில், உடனடியாக 139 என்ற ரயில்வே உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது ‘ரயில் மதத்’ செயலி மற்றும் இணையதளம் வாயிலாகப் புகார் அளிக்கலாம்.

சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்களில், அவசரத் தேவையின்போது பயணிகள் அதிக விலை கொடுத்து வாங்குவதையும், பின்னர் அதனைப் புகாராகப் பதிவு செய்வதையும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ரயில் பயணங்களின் போது அடிப்படைத் தேவையான குடிநீருக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, பயணிகளின் விழிப்புணர்வும் ரயில்வே நிர்வாகத்தின் தொடர் கண்காணிப்பும் மிக அவசியம் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.