தாய்லாந்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், இலவச தைவான் பயணம் மற்றும் சொற்பப் பணத்திற்காக ஆசைப்பட்டு, உயிருக்கே ஆபத்தான முறையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு கௌஷியுங் சர்வதேச விமான நிலையத்தில் பிடிபட்டனர். சுமார் 30 மற்றும் 38 வயதுடைய அந்தப் பெண்கள், தங்கள் உடலுக்குள் மறைத்து வைத்து ஹெராயின் கடத்தியதை எக்ஸ்-ரே சோதனையின் மூலம் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சர்வதேச சந்தையில் சுமார் 2.15 கோடி ரூபாய் மதிப்புள்ள 664 கிராம் ஹெராயின் அடங்கிய 115 காப்ஸ்யூல்கள் அவர்களின் மலக்குடல் மற்றும் வயிற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. இந்த கடத்தல் முயற்சியில் அவர்கள் பயன்படுத்திய காப்ஸ்யூல்கள் ஏதேனும் ஒன்று உடலுக்குள் உடைந்திருந்தால், அந்தப் பெண்கள் அங்கேயே உயிரிழந்திருப்பார்கள் என்று மருத்துவர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் வெறும் 80,000 ரூபாய் மற்றும் இலவச சுற்றுலாவுக்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த “தற்கொலை முயற்சி” போன்ற கடத்தலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பேராசை அவர்களின் எஞ்சிய வாழ்க்கையைச் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியுள்ளது.