அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமானப் பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து நகைச்சுவையாகப் பேசிய கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், புளோரிடாவில் உள்ள தனது மார்-அ-லாகோ இல்லத்திலிருந்து வாஷிங்டன் நோக்கி ‘ஏர் போர்ஸ் ஒன்’ விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட்டும் பயணித்தார்.
பயணத்தின் போது நிலவிய மோசமான வானிலை காரணமாக, நடுவானில் விமானம் திடீரெனக் கடுமையாகக் குலுங்கியது. இதனால் விமானத்தில் இருந்தவர்கள் சிறிது நேரம் பதற்றமடைந்தனர்.
வாஷிங்டன் வந்தடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அந்த அனுபவம் குறித்துக் கூறியதாவது: “விமானம் திடீரெனக் குலுங்கிய போது நான் மிகவும் பதற்றமடைந்தேன். நிலைதடுமாறாமல் இருக்க எதையாவது பிடித்துக்கொள்ளத் தேடினேன். ஆனால், பிடித்துக்கொள்ள வசதியாக எதுவுமே இல்லாத ஓரிடத்தில் என்னை அமர வைத்துவிட்டீர்கள் என நினைத்தேன். ஆனாலும் எதையாவது பிடிக்க மீண்டும் தேடினேன். ஆனால், நிச்சயம் நான் பிடித்துக்கொள்ளப் பார்த்தது கரோலின் லீவிட்டை அல்ல.”
டிரம்ப் இவ்வாறு கூறியபோது, அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஊடக செயலாளர் கரோலின் லீவிட் அதைக் கேட்டுச் சிரித்துவிட்டார். டிரம்ப்பும் அவரைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தார். டிரம்ப்பின் இந்தப் பேச்சைக் கேட்ட செய்தியாளர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நெட்டிசன்கள் பலரும் இதற்குப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர், “அதிபர் டிரம்ப் ஒரு வேடிக்கையான மனிதர்; அவர் செல்லும் இடமெல்லாம் கலகலப்பாக இருக்கும்” எனப் புகழ்ந்து வருகின்றனர். அதே சமயம், அதிபர் பதவியில் இருப்பவர் ஒரு பெண் அதிகாரியைக் குறித்து இவ்வாறு பேசியது தேவையற்றது எனச் சிலர் விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர்.
