ஈரான் அரசு தனது எல்லைகளை மீறிச் செயல்படுவதாகவும், அங்குள்ள நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானில் தற்போதைய அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள சூழலில், அதிபர் டிரம்ப் தனது ‘ஏர் போர்ஸ் ஒன்’ விமானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“ஈரான் தற்போது ‘சிவப்பு கோட்டை’ (Red Line) தாண்டிவிட்டது. அங்குள்ளவர்கள் தங்களை மக்கள் தலைவர்கள் என்று கூறிக்கொள்கிறார்களா அல்லது வன்முறை மூலம் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களா என்பது எனக்குத் தெரியவில்லை. ஈரானில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் அமெரிக்க அரசு மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.”

ஈரானில் போராட்டக்காரர்களை ஒடுக்கவும், வன்முறையைத் தூண்டுவதைத் தடுக்கவும் அரசு தரப்பில் இணையதள சேவைகள் (Internet) முடக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வெளியுலகுடன் தொடர்புகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், ஈரானில் இணையத் தொடர்பை மீட்டெடுக்கத் தான் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். “ஈரானுக்கு ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவையை வழங்குவது குறித்து அதன் உரிமையாளர் எலான் மஸ்க்குடன் பேச உள்ளேன்” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார். மேலும் ஏற்கனவே உக்ரைன் போரின் போது எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணையச் சேவை முக்கியப் பங்கு வகித்த நிலையில், தற்போது ஈரானிலும் அதே போன்ற நடவடிக்கையை எடுக்க டிரம்ப் ஆர்வம் காட்டி வருவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.