ஈரானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தீவிரப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் போராட்டங்களை ஒடுக்கப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் சீனா, இந்தியா, துருக்கி உள்ளிட்ட அனைத்து நாடுகளும் அமெரிக்காவுடனான தங்களது வர்த்தகத்திற்கு 25 சதவீத கூடுதல் வரியைச் செலுத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஈரானுடனான வர்த்தகத்தைத் துண்டிக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்குப் பணிய மாட்டோம் என்றும், பேச்சுவார்த்தை அல்லது போர் என எதுவானாலும் எதிர்கொள்ளத் தயார் என்றும் எச்சரித்துள்ளார்.
