ராஜஸ்தானில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், முதியவர்களின் பாதுகாப்புக் குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி ஒருவர், தனது வீட்டின் வராந்தாவில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் அவரை கட்டிலோடு அப்படியே தூக்கிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் மூதாட்டியின் கால்களில் இருந்த கனமான வெள்ளித் தண்டைகளை கழற்ற முடியாததால், திருடர்கள் இந்தத் துணிகரமான செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆள் நடமாட்டமற்ற இடத்திற்கு மூதாட்டியைக் கொண்டு சென்ற அவர்கள், அங்கு வைத்து நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் கொடூரம் என்னவென்றால், நகைகளைத் திருடுவதற்காக அந்த முதியவர் என்றும் பாராமல் திருடர்கள் அவரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி, திருடர்கள் சென்ற பிறகு அதிகாலையில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ராஜஸ்தான் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கிராமப்புறங்களில் தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறிவைத்து நடக்கும் இத்தகைய அத்துமீறல்கள் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.