திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில், கழிவறைகளைச் சுத்தம் செய்யப் பயன்படும் வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் திருமலை லட்டு பிரசாதத்தின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் தரம் குறைந்த நெய் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும் குறிப்பாக, லேப்சா போன்ற வீரியமிக்க வேதிப்பொருட்கள் நெய்யில் கலக்கப்பட்டிருப்பதாக சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையை மேற்கோள் காட்டி அவர் சுட்டிக்காட்டினார். இது லட்டுவின் தரத்தை மாற்றியது மட்டுமின்றி, பக்தர்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்திய சிபிஐ தலைமையிலான குழு, சுமார் 8,900 கிலோ எடையுள்ள வேதிப்பொருட்கள் நெய் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டதை உறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய ஆட்சியில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தற்போது பாத்ரூம் கிளீனர் போன்ற வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக வந்துள்ள புதிய தகவல் சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த முறைகேடுகளைக் கண்டறிய ஒரு நபர் குழு அமைக்கப்படும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார். அதேசமயம், இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்புத் தெரிவித்து வருவது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
