மத்தியப் பிரதேச மாநிலம் மந்தசௌர் மாவட்டத்தில் பாஜக கவுன்சிலரின் மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கவுன்சிலரின் மகனே கொலையாளி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தந்தையின் மூன்றாவது திருமணத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொடூரத்தை அவர் நிகழ்த்தியுள்ளார்.
அதாவது மந்தசௌர் நகராட்சியின் 15-வது வார்டு பாஜக கவுன்சிலர் ஷாஹித் மேவ். இவரது மனைவி ருபினா. கடந்த வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில், ருபினா தனது தாய் வீட்டிலிருந்து ஆட்டோவில் வாடகை வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அபினந்தன் நகர் அருகே ஆட்டோ வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ருபினாவை வழிமறித்து சரமாரியாகக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பினர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ருபினா உயிரிழந்தார்
இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி கேமராக்கள் மின்வெட்டு காரணமாக இயங்கவில்லை. இருப்பினும், அருகிலுள்ள பகுதிகளில் இருந்த கேமராக்கள் மற்றும் ருபினாவின் சிறு வயது மகளின் வாக்குமூலம் ஆகியவை கொலையாளியை அடையாளம் காட்டின.
விசாரணையில், கவுன்சிலர் ஷாஹித் மேவின் முதல் மனைவியின் மகன் சாஹில் தான் தனது கூட்டாளியுடன் சேர்ந்து இந்தப் படுகொலையைச் செய்தது உறுதி செய்யப்பட்டது.
கவுன்சிலர் ஷாஹித் மேவ் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் அவர் ருபினாவை மூன்றாவது முறையாகத் திருமணம் செய்துகொண்டார். (ருபினாவுக்கும் இது 5-வது திருமணம் எனக் கூறப்படுகிறது). தந்தையின் இந்த மூன்றாவது திருமணத்தால் ஆத்திரமடைந்த மகன் சாஹில், தனது குடும்பப் சொத்துக்கள் மற்றும் கௌரவம் பாதிக்கப்படுவதாகக் கருதி ருபினாவைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநரின் சாட்சியம் மற்றும் குழந்தையின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சாஹில் மற்றும் அவரது கூட்டாளி சோஹைல் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக ஏஎஸ்பி (ASP) தெரிவித்துள்ளார்.
பாஜக பிரமுகரின் குடும்பத்திலேயே நடந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
