உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், ஏழைப் பெண்களைக் குறிவைத்து அவர்களது கருமுட்டைகளை சட்டவிரோதமாகத் திருடி விற்பனை செய்து வந்த ஒரு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 15 வயது சிறுமி ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி கருமுட்டையைத் திருடிய புகாரில் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.
அதாவது பாபாமாவ் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவர் பணியாற்றி வந்தார். தன்னிடம் நல்ல செல்போன் இல்லாததால், அதை வாங்க பணம் சேமிக்க முயன்ற அந்த சிறுமியிடம், உடன் பணியாற்றும் தோழி ஒரு திட்டத்தைக் கூறியுள்ளார். தனது தாயின் உதவியுடன் அந்த சிறுமியை ஒரு கும்பலிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். 10,000 ரூபாய் பணம் தருவதாகக் கூறி, அந்த சிறுமியை ஒரு ஐ.வி.எஃப் (IVF) மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மைனர் சிறுமியிடமிருந்து கருமுட்டையை எடுப்பது சட்டப்படி குற்றம் என்பதால், அக்கும்பல் அந்த சிறுமிக்கு போலி ஆதார் கார்டு தயாரித்துள்ளது. மேலும், அந்த சிறுமி திருமணமானவர் என்பது போன்ற போலி ஆவணங்களையும் தயார் செய்து, ஐ.வி.எஃப் மையத்தில் சமர்ப்பித்து சட்டவிரோதமாக கருமுட்டையை எடுத்துள்ளனர். இது குறித்து அறிந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
இந்த வழக்கில் சிறுமியின் தோழி பலக், அவரது தாய் ரிங்கி, சீமா பாரதியா, அவரது மகன் ஹிமாம்ஷு மற்றும் ஐ.வி.எஃப் மைய ஏஜென்ட் கல்பனா பாரதியா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே இதுபோன்ற பல மோசடிகளில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கும்பலுக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் இருப்பதும், வசதி குறைந்த பெண்கள் மற்றும் மாணவிகளைப் பணத்தாசை காட்டிச் சிக்க வைப்பதும் அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் சில முக்கியப் புள்ளிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட ஐ.வி.எஃப் மையத்தில் இதுவரை நடந்த கருமுட்டை தானம் குறித்த முழுப் பட்டியலை போலீசார் கேட்டுள்ளனர்.
